எனக்கே நான் புரியாத புதிர்

Wednesday, July 24, 2019

பெண் பித்தன் உறவு

பேய் பிடித்தவரின் உறவிலும்
பெண் பித்து பிடித்தவன் உறவே கொடிது

என் வாழ்வின் எல்லாமுமாய்

தாயாய் சேயாய் நீயாய்
தந்தையாய் சிந்தையாய் விந்தையாய்
வானாய் மண்ணாய் நானாய்
ஆணாய் பெண்ணாய் அனைத்துமாய் நீயானாய்
இணையாய் துணையாய் பிணையாய்
பணிவாய் துணிவாய் பிணியாய்
வளியாய் ஒளியாய்
எல்லாமுமாய் ஆனாய்
முருகா
என் வாழ்வின்
எல்லாமுமாய் ஆனாய்
நீ
முருகா

புதிதாய் காணச்செய்.

உனை முட்டாளாய்
நோக்கும் உலகை
உதாசீனம்  செய்து
உனை புதிதாய் காணச்செய்.

ஏனோ

உணர்வைத் கெடுத்து
உணவை கெடுத்து
உறக்கம் கெடுத்து
உடலைக் கெடுத்து
உறவையும் கெடுத்து
உயிரை எடுப்பது ஏனோ

Monday, June 12, 2017

செப்புவீரோ


வேதனையாய் இருக்கிறது
வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

சாலையோரம் நின்று
காளை யொருவன்
கடைக்கண் பார்வை
காண வேண்டி
காத்திருக்கும்

வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

காமுகனொருவன்
கட்டிய தாலி
கழுத்திருக்க
கயவனவன் தந்து சென்ற
கைக்குழந்தை வீடிருக்க
கால் வயிறு
கழுவிடவே
கடை விரித்த

வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது


வேதனையாய் இருக்கிறது
வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

சாலையோரம் நின்று
காளையவன்
கடைக்கண் பார்வை
காண வேண்டி
காத்திருக்கும்

வேசியவளை காண
வேதனையாய் இருக்கிறது

கணவன்
கட்டிய தாலி
கழுத்திருக்க
குழந்தை ஒன்று  வீடிருக்க
காமம்  தலைக்கேற
கள்ள கணவனவனை

காண வேண்டி
காத்திருக்கும்

வேசியவளை  காண
வேதனையாய் இருக்கிறது

காட்சிகளிரண்டும்
கண்டுவிட்ட
கண்களிரண்டும்
கண்ணீரால் நிறைந்து விட

ஒருத்தியோ!
கயவனை நம்பிய பாவத்தால்
பெரும் தீ தனில் எரிகிறாள்

மற்றோருத்தியோ !
கணவன் நம்பும் லாபத்தால்
காமத் தீ தனில் கரைகிறாள்

இருவரில் ஒரு உயிர் வேண்டுமென
மரண தேவன் உமை வந்து கேட்க

உங்கள் விரல் காட்டும் பெண்
எவரென செப்புவீரோ ?

Tuesday, November 1, 2016

ஆணும் பெண்ணும் சமமா?

எந்த ஒரு வாசிப்பும் வாசிப்பவர் மன நிலையை பொருத்தது. இந்த தலைப்பை கண்ட சிலரோ, "இந்த கேள்வி கேட்கும் தோரணைய பாத்தா இவன் ஆணாதிக்க காரனோ"  என்று எண்ண கூடும்.
"அதெல்லாம் எங்களுக்கு தெரியும், நீ என்ன சொல்ல வர இப்ப" என்றும் எண்ணுபவர்கள் இருக்க கூடும்.

என்னைப் பொருத்த வரை பிறப்பில் இருவரும் சமம். இருப்பினும் பெண்கள் சற்றே அதிகம் மதிக்க தகுந்தவர்கள்.
காரணம் இயற்கை தரும் இடைஞ்சலும் , மறுபிறப்பு காணும் பிரசவமும்.

பொறுமை , அன்பு , அரவணைப்பு என நான் காரணம் கூறினால், அது ஆண்களிடம் இல்லை என்றாகிவிடும்.

"இதே ஆம்பளைங்க தான் பெக்கனும்னா பெக்க மாட்டோமா, இதை ஏதோ பெருசா பேசிகிட்டு"  என்று எண்ணும் அண்ணன்மார்களே, முதல் மதிப்பெண் நம்மாலும் எடுக்க முடியும். ஆனால் எடுத்தவர்களை தான் நாம் பாராட்டுவோம். அங்கணமே பெண் தன் கடமையாயினும் அதை செய்தலில் இருக்கும் சிரமங்களால் மதிக்கப்படுகிறாள்,

"அப்போ பொண்ணுங்க ஆம்பள மாறி ஜாலியா ஊர் சுத்தலாம் மற்ற எல்லாம் பண்ணலாம" என்று நினைப்பவர்கட்கு மட்டும்.
மற்ற எல்லாம் என்று சொல்வதில் நல்ல விசயங்கள் இருந்தால் செய்யலாம்.

"அப்படினா பெண்கள் எல்லாம் நல்லவங்களா, ஆம்பளைங்க எல்லாம் கெட்டவங்களா " என்று கேட்பவர்கட்கு.

பொதுப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இருபுறமும் நன்மையும் திமையும் நிறைந்தவர்கள் உண்டு. அதன் விகிதாசாரம் வேறுபடும்.

  உதாரணமாக துரோகம். ஒரு பெண்ணோ ஆணோ துரோகம் செய்தல் தவறுதான். ஆனால் மனைவிக்கு தெரியாமல் வேரொரு பெண்ணோடு சுற்றி திரியும் ஆணை காட்டிலும் , கணவனுக்கு தெரியாமல் வேரொரு பெண்ணோடு சுற்றி திரியும் பெண் தான் அவப்பெயருக்கு ஆளாகிறாள்.

   நல்ல பெண் பூ போன்றவள், நாற் /நூல் போன்ற நல்ல ஆண் கிடைக்க தொடுக்கப்பெற்று மலர் மாலையாகிறாள். குரங்கு போன்ற ஆண் கையில் சிக்கினால் சின்னாபின்னம் ஆகிறாள்.

  நல்ல சேர்க்கையோ தீய சேர்கையோ ஆண் எதையும் இழப்பதில்லை.

"இது ஆணாதிக்க சமுதாயம், அதான் இப்படி இருக்கு. அப்படி பெண்ண அடிமையா பாக்கிற சமுதாயம் எப்படியா உருப்புடும்" என என் இதயம் கூட சில சமயம் கேட்டதுண்டு.

பெண்கள் அடங்கி போக அவசியமும் இல்லை , கையேந்தி உரிமைக்காக நிற்கவும் தேவை இல்லை. அவள் ஒரு சுதந்திர பறவை. வேடன் விரித்த வலை அறியாது சிக்க வாய்ப்புள்ள பறவை. வேட்டையாடி பசியாற காத்திருக்கும் கழுகளுக்கு இறையாக வாய்ப்புள்ள பறவை.

ஆகவே சுதாரிப்பும் சுயகட்டுப்பாடும் கொண்டு பறக்கையிலே ஏமாற வாய்ப்பில்லை.

ஆணோ பெண்ணோ "எங்களுக்கு எல்லை தெரியும்" என்று சொல்லுபவர்கள் தாங்கள் செய்கின்ற செயலை பெற்றோரிடமோ துணையிடமோ சொல்ல முடியும் என்றால் தங்கள் எல்லை சிறப்பாய் கட்டமைக்க பட்டது என பொருள். இல்லை என்றால் செய்வது தவறு என உணர்ந்து நிறுத்திக்கொள்ளுங்கள்.

"காதலை எப்படி அப்பா அம்மா கிட்ட சொல்றது" என்று சொல்லும் வாலிப உள்ளங்களுக்கு காதலை கவனாமாய் செய்து கருத்தாய் பெற்றோர்களுக்கு புரிய செய்யுங்கள். ஜாதியின் பெயராலோ மதத்தின் பெயராலோ உண்மை காதல் இணைய தடை உண்டென்றால் தடை உடைத்து சேருங்கள். முக்கியமாக உண்மை காதலர்களுக்கு மட்டும்.

"அதென்னய்யா உண்மை காதல் பொய் காதல்" என கேட்கும் மக்களே அதன் பொருள் எமக்கும் தெரியாது. அதை உணர வேண்டியது தாங்கள்தான்.

"அது சரி எங்க காதல எப்படி என் துணைகிட்ட சொல்வது" என்று சொல்லும் நல்லவர்களே ஆள விடுங்க. அது தப்புனு சொன்னா உங்களுக்கு தப்புனே தெரியாது.

நான் ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் என சொல்லவில்லை.

ஆணும் பெண்ணும் சேர்ந்தே இவ்வுலகை படைத்திட்டனர். ஆம்  இவ்வுல ஜீவராசிகள் அனைத்தும் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் வாரிசுகளே.

இங்கு இருவரும் இணையானவரே. ஒருவரை ஒருவர் மதித்திடுவோம். இணைந்திருப்போம். இனிய உலகம் காண்போம், 

Friday, October 28, 2016

நானும் சொல்றேன்

நாட்டில்
நடக்கும்
நடப்புகள் காண
நடுக்கமும்
நம்முள்
நாட்டியமாடுது

மத வாதம்
இன வாதம்
தீவிர வாதம் என
வாதம் வந்த உலகிலே
வாழும் நாம்
கலியின்
கிலியில்

எத்துணை கொலைகள்
எத்துணை கள்ளம்
எத்துணை வன்கொடுமை
எத்துணை பெண்கொடுமை
அத்துணையும் ஒழியட்டும்
நரகாசுரன் அழிந்த நாள் முதலாய்

தீப ஒளியில்
தீமைகள் மறையட்டும்

அன்பும்
அமைதியும்
அரவணைப்பும்
அனைவரது இதயத்தில் பூக்கட்டும்

இனிப்புகள் உண்டு
இன்முகம் கொண்டு
இனிதே ஆடுவோம்
கொண்டாடுவோம்


தீபாவளி நல்வாழ்த்துகள்

Thursday, March 17, 2016

கதிரவனின் கோடை மழை - விமர்சனம் அல்ல நிதர்சனம்

இக்கோடையிலே ரசிகர்களுக்கு சிறந்த மண் சார்ந்த படைப்பாய் வெளிவந்து உணர்வு பூர்வமாய் இதயங்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்.

இன்று வியாபார தந்திரம் அறியாது திறமை, படைப்பு, முயற்சி மட்டும் கொண்டு, வெளியிட்ட படைப்பாளிகளுக்கு வலியை மட்டும் தந்து நிற்கிறது.

தரமான படம் , அதை காண்பதற்கு அல்லது மக்களிடம் கொண்டு செல்வதற்கு  களம் அமையாது கண்டுகொள்ள ஆள் இல்லாமல் நிர்கதியாய் இருக்கிறது.

கதையின் பின்புலம். சங்கரங்கோயில் அருகே உள்ள கிராமம். அங்கு வாழும் மக்களில்  சிலர் கேரளா சென்று திருடி வசதியாய் வாழ்கின்றனர். அந்த கிராமத்தில் இருந்து ராணுவத்தில் பணியாற்றும் வீரனாக நம் கதாநாயகன்.

அறிமுக கதாநாயகன் கண்ணன், நடிகர் தனுஷ் அவர்களின் தம்பி உறவுமுறை.

அவரது   நண்பன் களவு செயல்களில் ஈடுபடுபவன். பலர் கூறியும்  அவன் மீது நம்பிக்கை கொள்கிறார் நமது நாயகன். அவ்வூரில் நடக்கும் அக்கிரமங்களை அடியோடு வேரறுக்க நினைப்பவர் காவல் துறை ஆய்வாளராய்
 வரும் இயக்குனர் களஞ்சியம் . அவரது பாசமிகு சகோதரி நம் கதையின் நாயகி. கண்டதும் ஈர்ப்பு அதன் எதிரொலியாய் காதல் கொள்கிறார் நம் நாயகன்.

இந்த சூழ்நிலையில் தனது நண்பன் திருட்டு செயலில் ஈடுபட்டு , திருட்டு நகைகளை ஊருக்கு எடுத்து வருகிறான். உண்மை அறியாமல் நாயகனும் நண்பனோடு கேரளா சென்று திரும்புகிறான் தனது இருசக்கர வாகனத்தில். அன்று இரவே திருடிய நகைகளை இருசக்கர வாகனத்தின் பெட்ரோல்  டேங்கில் நண்பன் கொண்டுவந்ததை அறிந்து மனம் நொந்து நட்பை பிரிகிறான்.இதானால் மனம் திருந்தும் நண்பனும் தொழில் செய்து பிழைக்கிறான். ஒரு சூழலில் இதை அறிந்து நட்பை தொடர்கிறான் நாயகன்.

கண்டதும் காதல், நாயகிக்கு ஆபத்தில் உதவி  , நாயகனின் மீது நாயகியின் அண்ணனுக்கு மரியாதை என சுலபமாய் சுபம் வரும் என்றிருக்க வருகிறது சிக்கல் விதியின் பேரால்.
திருந்தி வாழும் நண்பன் காதலித்த பெண்ணை மணம் முடிக்க. பலகாலம் அவனது திருட்டு தொழில் தெரிந்தும் சாட்சியம் இல்லாமல் அவனை பிடிக்க வாய்ப்பு தேடும் காவல் ஆய்வாளருக்கு, ஒரு திருட்டு சம்பவத்தில் நாயகனின் நண்பன் குற்றவாளியாய் ஐயப்பட செய்யும்  சூழ்நிலையும் ஆதாரமும் கிடைக்க, கைது படலம் நடக்கிறது.

விசாரணை என்ற பெயரில் அடிக்க, நண்பனும் இறக்கிறான். அதனால் நாயகியின் அண்ணனுக்கும் நாயகனுக்கும் பகைமை பிறக்கிறது.

நாயகன் நாயகியை கை பிடித்தார இல்லையா எனபது மீதி கதை.

இமான் அண்ணாச்சி நகைச்சுவைக்காக தன பங்கையாற்றி இருக்கிறார்.

இசை சாம்பசிவம், புதுமுகம் ஆனால் இதமான இனிய  இசை.

பாடல்கள் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள். மண் சார்ந்த கவியோடு மண் சார்ந்த மனத்தோடு மண் சார்ந்த நடையில் அவரது பாடல்கள் அருமை.

தயாரிப்பு யாழ் தமிழ்த்திரை சார்பாய் கு.சுரேஷ்குமார் மற்றும் த.அலக்சாண்டர். நண்பனை இயக்குனராக்க ஆசை பட்டு தயாரிப்பாளராய் அவதாரம் எடுத்து இருக்கிறார்கள் .

இயக்குனர் கதிரவன் சங்கரங்கோயிலை சேர்ந்தவர், பிரபுதேவா அவர்களிடம் உதவி இயக்குனாராய் இருந்தவர். அவரே ஒளிப்பதிவு. முதல் திரைப்படம் என்று கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. தனது பணியை நிறைவாய் செய்து இருக்கிறார்.

இங்கு நிதர்சனம் திறமை, முயற்சி இருந்தும் வாய்ப்பு, களம் அமையவில்லை. ஏழு மாதங்களாய் வெளிவர முடியாமல் இப்போது வந்துள்ளது. மக்கள் வர இயலா நேரம் இப்படம் திரையிடப்படுகிறது. சரியான திரையரங்கங்கள் இல்லை. திரைப்பட வெளியீடு ஒருசிலரின் கட்டுப்பாட்டில். பார்த்த சிலரும் நல்ல விமர்சனங்களை முன்வைக்கின்றனர். என்ன பயன்? என்ன பதில்?

Monday, July 2, 2012

Saturday, February 12, 2011

உயிரே

உண்ணாது உறங்காது
உணர்வின்றி உயிரோடு இருந்தேன்
உயிரே
உன் குரல் கேளாது

Thursday, December 31, 2009

ந‌ன்றி கூறி அனுப்புவோம்

ஒன்றை முன் கொண்டு அத‌னில் பாதி பின் கொண்டு, த‌ன‌க்கு முன் பிற‌ந்து, பெய‌ரிலே ம‌ட்டும் குறைந்த,‌ தான் வாழ‌ப்போகும் நாளே வாழ்ந்து விட்டு போகும் த‌ன் உட‌ன் பிற‌ப்பாம் 2009 ஐ வ‌ழிய‌னுப்பும் 2010 ஐ வ‌ர‌வேற்ப‌தோடு, நாம் வ‌ந்த பாதையை எண்ணிப்பார்த்து 2009 க்கு ந‌ன்றி கூறி வழி அனுப்புவோம். ஜாதி ம‌த‌ பேத‌மின்றி, ம‌த‌ இன‌ மாறுபாடின்றி, நிற‌ குல‌ வேற்றுமையின்றி, ஆண் பெண் அனைவ‌ருமாய் அன்பை ம‌ட்டும் கையில் கொண்டு ம‌னித‌னாய் ம‌னித‌ம் வ‌ள‌ர்ந்திட‌வே ஒன்று கூடி செய‌ல் ப‌டுவோம்.

           இட‌ம் : ‍ நாட‌க‌ மேடை (உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை அன்றோ)

           நேர‌ம் : 15:59 GMT  (31‍‍‍‍.12.2009)  ‍முத‌ல் 10.59 GMT  (01.12.2009) வ‌ரை
        
          ப‌ங்குகொள்வோர் :  ம‌க்க‌ள்


அனைவ‌ருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்க‌ள்.

Sunday, December 20, 2009

அவ‌தார்

விமர்ச‌னம் இல்லை‍ - வேற்றுகிர‌க‌ வாசிக‌ளுட‌ன் வாழ்ந்துவ‌ந்த‌ அனுப‌வ‌ம்



டைடானிக் இய‌க்குன‌ரின் ம‌ற்றுமொரு அற்புத‌ ப‌டைப்பு. ப‌ல‌ ஆண்டுகால‌ உழைப்பின் பிற‌ப்பு.
க‌ருவும் க‌ற்ப‌னையும் அருமையிலும் அருமை.

 விலை ம‌திப்பில்லா க‌னிம‌ தாது இருக்கும் கிர‌க‌ம், 'நாவி' எனும் வேற்றுகிர‌க‌ வாசிக‌ள் இருக்கும் அந்த‌ பாண்டோரா கிர‌க‌ம். புவியில் வாழும் சில‌ ஜீவ‌ராசிக‌ளின் சாய‌லில் ம‌னித‌ர்க‌ளும் ம‌ற்றும் ப‌ல‌ வில‌ங்குக‌ள் வாழும் ப‌சுமையான‌ கிர‌க‌ம்.

  புவியில் இருந்து சில‌ ஒளி ஆண்டுக‌ள் (ச‌ரியான தூர‌ம் க‌தைக்கு அவ‌சிய‌ம் இல்லை) தூர‌ம் இருக்கும் அந்த‌ பாண்டோராவிற்கு (இனி கிர‌க‌த்தை அத‌ன் பெய‌ராலேயே அழைப்போம்) புவியில் இருந்து ஆராய்ச்சி குழுவும், ராணுவ‌ குழுவும் க‌னிம‌ங்க‌ளை கைப‌ற்றும் நோக்குட‌ன் செல்கின்ற‌ன‌.

 ப‌ண்டோரா கிர‌க‌வாசிகளான நாவிக‌ள் 3 மீட்ட‌ருக்கும் உய‌ரமான‌ , நீல‌ நிறதேக‌மும் கொண்ட‌ ம‌னித‌ரிக‌ள் தோன்றுகிறார்க‌ள். திரையில் காணும் போது நிஜ‌ ஜீவிக‌ள் போல‌வே உள்ளார்க‌ள்.

  ந‌ம் க‌தாநாய‌க‌ன் ஜேக் க‌ப்ப‌ல் ப‌டையில் ப‌ணிபுரிந்து விப‌த்தில் த‌ன‌து இரு கால்க‌ளின் செய‌ல்பாடுக‌ளையும் இழ‌ந்த‌வ‌ன். அவ‌ன‌து இர‌ட்டை பிற‌வியான‌ அண்ண‌னின் ம‌ர‌ண‌த்தின் கார‌ண‌மாய் அண்ணன் மேற்கொள்ள‌ வேண்டிய‌ இந்த‌ அவ‌தார் ஆராய்ச்சி ப‌ணிக்கு, அண்ண‌னின் ஒத்த‌ உருவ‌ம் கொண்ட‌ ஜேக், பாண்டோரா அழைத்து வ‌ர‌ப்ப‌டுகிறான்.

  நாவிக‌ள் போல் தோற்றம் அளிக்கும் உட‌லை உருவாக்கி அத‌ற்க்கு ம‌னித‌னின் ஆன்மாவை செலுத்தி (கூடு விட்டு கூடு பாய‌ செய்வ‌து போல்) உண்மையான‌ நாவி ம‌னித‌ர்க‌ள் ம‌த்தியில் உலாவ‌ விடுத‌லே ந‌ம‌து ஆராய்ச்சியாள‌ர்க‌ளின் வேலை. அதுபோல் உருவாக்க‌ப்ப‌டும் செய‌ற்கை நாவிக‌ளே 'அவ‌தார்'.

கிரேஸ் , இந்த ஆராய்ச்சி கூட‌த்தின் த‌லைமை ஆராய்ச்சியாளர், நாவிக‌ளை ப‌ற்றி அறிந்த‌வ‌ர், அவர்க‌ளை ப‌ற்றி நூல் எழுதிய‌வ‌ர். நாவிக‌ளுட‌ன் க‌ல‌ந்த‌ அனுப‌வ‌ம் உள்ள‌வ‌ர். இவ‌ர‌து த‌லைமையில் ஜேக் ம‌ற்றும் அவ‌ர‌து ந‌ண்ப‌ர் , மூவ‌ரும் ஒரு பெட்டியினுள் த‌ஞ்ச‌ம் கொண்டு சுய‌ நினைவு அக‌ல‌, வேறொரு இட‌த்தில் இருக்கும் நாவிக‌ளின் செய‌ற்கை உட‌லுக்குள் 'அவ‌தார்' ஆக‌ உருவெடுக்கிறார்க‌ள்.

அவ‌தார் ஆக‌ உருவெடுத்த‌ க‌தாநாய‌க‌ன் தன் கால்க‌ள் செய‌ல் ப‌டுவ‌தால் ஏற்ப‌டும் பேரான‌ந்த‌த்தை அவ‌ன‌து ஓட்ட‌ம் எடுக்கும் காட்சியில் அற்புத‌மாய் ப‌ட‌மாக்கி இருக்கிறார்க‌ள்.

பின் கிரேஸ், ஜேக் ம‌ற்றும் அவ‌ன‌து ந‌ண்ப‌ன் மூவ‌ரும் நாவிக‌ள் இருப்பிட‌ம் நோக்கி வ‌ருகிறார்க‌ள்.
அங்கு மிருக‌மொன்று விர‌ட்ட‌ க‌தாநாய‌க‌ன் க‌தைக்குள் வ‌ருகிறான்.

இங்கு அந்த‌ காட்டின் காட்சியாக்க‌ம் , வ‌ந்து மிர‌ட்டும் குர‌ங்கு, காண்டா மிருக‌ம் , ஓநாய் , ஓணான் போன்ற பூமியில் இருக்கும் வில‌ங்குக‌ளை ஒத்த‌ வில‌ங்குக‌ளின் தோற்ற‌ம் அருமை.

அவ்வாரு காட்டிற்குள் த‌னியே சிக்கும் க‌தாநாய‌க‌னை ஓநாய்க‌ளிட‌ம் இருந்து காப்பாற்றி ந‌ம‌து  க‌தா நாய‌கி(நாவி பெண்) காட்சி த‌ருகிறாள். நாய‌க‌னை த‌ன‌து குழுவிற்கு அழைத்து செல்லும் நாய‌கியே அவ‌னுக்கு நாவி ம‌க்க‌ளின் வாழ்கை முறையையும் பழ‌க்க‌ வ‌ழ‌க்க‌ங்க‌ளையும் க‌ற்பிக்கும் பொறுப்பிற்கு ஆளாகிறாள்.

 அவ்வாறே நாய‌க‌னும் ந‌ன்கு க‌ற்று நாவி ம‌க்க‌ளின் ந‌ம்பிக்கைக்கும் நாய‌கியின் காத‌லுக்கும் உரிய‌வ‌னாகிறான். நாய‌க‌ன் பாதி நேர‌ம் ம‌னித‌னாய் ஆராய்ச்சி கூட‌த்திலும் மீதி நேர‌ம் அவ‌தாராய் நாவிக‌ளுட‌னும் இருக்கிறான். நாவிக‌ள் இய‌ற்கையை வ‌ண‌ங்குவ‌தும் , பிற‌ உயிர்க‌ளை ம‌திப்ப‌து நாய‌க‌னை க‌வர்கிற‌து.

நாவிக‌ளின் இருப்பிட‌மோ ஒரு மிக‌ப்பெரிய ம‌ர‌த்தின் மீது, ம‌னித‌ர்க‌ள் தேடும் க‌னிம‌மோ அம்ம‌ர‌த்திற்க‌டியில். நாவிகளை அவ்விருப்பிட‌ம் இருந்து அக‌ற்றுவ‌தே ஆராய்ச்சியாளர்க‌ளின் நோக்க‌ம். அதற்கு க‌தாநாய‌க‌னுக்கு கொடுக‌ப்ப‌ட்ட‌ கால்ம் மூன்று மாத‌ம். இயலாத‌ ப‌ட்ச‌த்தில் அவ‌ர்க‌ளை அழிப்ப‌தே இவ‌ர்க‌ளின் நோக்க‌ம்.

  நாவிக‌ள் செய‌ற்பாடுக‌ள் மீது ஈடுபாடு கொண்ட‌ நாய‌க‌னோ மூன்று மாத‌ கால‌த்திற்கு பின் அவ‌ர்க‌ளை அக‌ற்றுவ‌து கூடாது என‌ உண‌ர்கிறான். இதைய‌றிந்த‌ ராணுவ‌ வீர‌ர்க‌ள் அவ‌ன‌து உட‌லை த‌ட்டி எழுப்பி அவ‌ன‌து அவ‌தாரை செய‌லிழ‌க்க‌ செய்து மூவ‌ரையும் சிறை பிடிக்கிறார்க‌ள்.பின் பெரும் ஆயுத‌ம் கொண்டு நாவிக‌ளின் இருப்பிட‌மான‌ ம‌ர‌த்தை அழிக்கிறார்க‌ள்.

பின் அவ‌ர்க‌ள் மூவ‌ரும் எப்ப‌டி நாவிக‌ளை அடைகிறார்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு உத‌வுகிறார்க‌ள் என்ற‌ ஆர்வ‌த்தை அதிக‌ரித்து ந‌மை இருக்கையின் நுணிக்கே கொண்டு வ‌ருகிறார் ந‌ம‌து இய‌க்குன‌ர்.

அருமையான‌ ச‌ண்டை காட்சிக‌ள், நிஜ‌மென‌ ந‌ம்பும் அள‌வு கிராபிக்ஸ் காட்சிக‌ள், மித‌க்கும் ம‌லைக‌ள், அதிர‌ வைக்கும் ப‌ற‌வைக‌ளும் அதில் ச‌வாரியும் அப்ப‌ப்பா பிர‌மாண்ட‌ம்.

முப்ப‌ரிமாண் திரையில் காண்ப‌தினால் நீங்க‌ள் பாண்டோரா சென்று நேரில் காணும் ஒரு உண‌ர்வு ஏற்ப‌டுவ‌து உறுதி.

மொத்த‌த்தில் அருமையான ப‌ட‌ம், அனைவரும் பார்க்க‌ வேண்டிய‌, பார்க்க‌ கூடிய‌ ப‌ட‌ம்.

 உருவாக்கிய‌ அனைவ‌ருக்கும் ஒரு ச‌லாம், இய‌க்குன‌ருக்கு ஒரு த‌னி ச‌லாம்,

Saturday, December 19, 2009

தேடிக்கொண்டு இருக்கிறேன்

தேடிக்கொண்டு இருக்கிறேன் ... 
எனது  தேவையையும் 
அதன் தேவைகளையும்

க‌லியுற‌வு

இருகை இணைந்தேயிருந்தாலும்,
நம்பிக்கைக் கொள்ளுமளவு இல்லயே 
இக்கலியின் உறவில்

படைத்ததாய் படைத்தோம்


பழி போடவே படைத்தோம் 
கடவுளை நமை படைத்ததாய்

ம‌ருந்து வாழ்க்கை

கசப்பாய் உண்டாய் மருந்தை
நீ குணம் பெற - அதுபோல்
கசப்பாய் இருக்கும் வாழ்கை
உன் மனம் திடம் பெற

க‌(ல்)டவுள்


இல்லை என்பது எளிது -
இல்லாமல் ஆக்குவது அதனினும் எளிது -
தொல்லை என்று வந்தால் -
கல்லை நோக்கி ஒடுவோம் நாங்கள் 

உணர்வதுவே உணர்வு,
புரிவதுவே உறவு
இரண்டும் கொண்டோம் அவனிடம்

 

காத்திருக்கிறேன்

கண்ணே
நேரில் காணும் வரை
காத்திருக்கச் சொன்னாய்,
காதலை நீ சொல்லும் வரை
சாத்தியமாய் இருந்ததடி.
சொன்ன நொடி முதலாய்
சொர்கமும் நரகமானதேன்,
சாவது போல் உணர்கிறேன்
சத்தியமாய் உண்மையடி.

ஏய் பெண்ணே!


ஏய் பெண்ணே!
பிரம்மன் தீட்டிய கவிதை நீ என எண்ணி
உனை கூடும் நாள் நோக்கி தவமிருந்தேன்
கவிதை எழுதும் என் பணி தனையும் நான் மறந்தேன்

நான் படும் துன்பம் கூறுவது நீ இரங்க அன்று
நாளை நான் கூட எண்ணுகின்ற வேளையில்
நீ என் உட்லோடு மனம் கூடி இன்பம் தந்து பெறவே

உன் கையாலே உண்டு
உன் மடியிலே உறங்கி
உன் பூவிதழ் சுவைத்து
உன் மார்போடு ஒன்றி
வாழ்கின்ற வாழ்வே வாழ்வு

காமத்திலே நான் மிதப்பது
என் காதலின் ஒரு சிறு பகுதியென்றால்
என் காதலின் அளவை கண்டோயோ பெண்கிளியே
நீ காண்பதுவென் காமத்தின் சாரமன்று
என் காதலுன் மீது பாயும் ஆழம்


Saturday, September 12, 2009

காதல் போதை



பெண்ணுக்குள் போதை வைத்தான் -அவள்
கண்ணுக்குள் காதல் வைத்தான்
எனை அவள் காணும் போது நெஞ்சுக்குள்
பூகம்பம் தானே - அதுவும்
இதமான வேதனை தானே

அவள் கண்கள் கண்ட போது துக்கம் இல்லை
அவள் என்னை கண்ட முதலாய் தூக்கம் இல்லை

நான் காதல் எனும் தேர்வில் தேறிவிட்டேன்
ஒரு கானம் பாடும் கவியாய் மாறிவிட்டேன்