எனக்கே நான் புரியாத புதிர்

Thursday, March 17, 2016

கதிரவனின் கோடை மழை - விமர்சனம் அல்ல நிதர்சனம்

இக்கோடையிலே ரசிகர்களுக்கு சிறந்த மண் சார்ந்த படைப்பாய் வெளிவந்து உணர்வு பூர்வமாய் இதயங்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்.

இன்று வியாபார தந்திரம் அறியாது திறமை, படைப்பு, முயற்சி மட்டும் கொண்டு, வெளியிட்ட படைப்பாளிகளுக்கு வலியை மட்டும் தந்து நிற்கிறது.

தரமான படம் , அதை காண்பதற்கு அல்லது மக்களிடம் கொண்டு செல்வதற்கு  களம் அமையாது கண்டுகொள்ள ஆள் இல்லாமல் நிர்கதியாய் இருக்கிறது.

கதையின் பின்புலம். சங்கரங்கோயில் அருகே உள்ள கிராமம். அங்கு வாழும் மக்களில்  சிலர் கேரளா சென்று திருடி வசதியாய் வாழ்கின்றனர். அந்த கிராமத்தில் இருந்து ராணுவத்தில் பணியாற்றும் வீரனாக நம் கதாநாயகன்.

அறிமுக கதாநாயகன் கண்ணன், நடிகர் தனுஷ் அவர்களின் தம்பி உறவுமுறை.

அவரது   நண்பன் களவு செயல்களில் ஈடுபடுபவன். பலர் கூறியும்  அவன் மீது நம்பிக்கை கொள்கிறார் நமது நாயகன். அவ்வூரில் நடக்கும் அக்கிரமங்களை அடியோடு வேரறுக்க நினைப்பவர் காவல் துறை ஆய்வாளராய்
 வரும் இயக்குனர் களஞ்சியம் . அவரது பாசமிகு சகோதரி நம் கதையின் நாயகி. கண்டதும் ஈர்ப்பு அதன் எதிரொலியாய் காதல் கொள்கிறார் நம் நாயகன்.

இந்த சூழ்நிலையில் தனது நண்பன் திருட்டு செயலில் ஈடுபட்டு , திருட்டு நகைகளை ஊருக்கு எடுத்து வருகிறான். உண்மை அறியாமல் நாயகனும் நண்பனோடு கேரளா சென்று திரும்புகிறான் தனது இருசக்கர வாகனத்தில். அன்று இரவே திருடிய நகைகளை இருசக்கர வாகனத்தின் பெட்ரோல்  டேங்கில் நண்பன் கொண்டுவந்ததை அறிந்து மனம் நொந்து நட்பை பிரிகிறான்.இதானால் மனம் திருந்தும் நண்பனும் தொழில் செய்து பிழைக்கிறான். ஒரு சூழலில் இதை அறிந்து நட்பை தொடர்கிறான் நாயகன்.

கண்டதும் காதல், நாயகிக்கு ஆபத்தில் உதவி  , நாயகனின் மீது நாயகியின் அண்ணனுக்கு மரியாதை என சுலபமாய் சுபம் வரும் என்றிருக்க வருகிறது சிக்கல் விதியின் பேரால்.
திருந்தி வாழும் நண்பன் காதலித்த பெண்ணை மணம் முடிக்க. பலகாலம் அவனது திருட்டு தொழில் தெரிந்தும் சாட்சியம் இல்லாமல் அவனை பிடிக்க வாய்ப்பு தேடும் காவல் ஆய்வாளருக்கு, ஒரு திருட்டு சம்பவத்தில் நாயகனின் நண்பன் குற்றவாளியாய் ஐயப்பட செய்யும்  சூழ்நிலையும் ஆதாரமும் கிடைக்க, கைது படலம் நடக்கிறது.

விசாரணை என்ற பெயரில் அடிக்க, நண்பனும் இறக்கிறான். அதனால் நாயகியின் அண்ணனுக்கும் நாயகனுக்கும் பகைமை பிறக்கிறது.

நாயகன் நாயகியை கை பிடித்தார இல்லையா எனபது மீதி கதை.

இமான் அண்ணாச்சி நகைச்சுவைக்காக தன பங்கையாற்றி இருக்கிறார்.

இசை சாம்பசிவம், புதுமுகம் ஆனால் இதமான இனிய  இசை.

பாடல்கள் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள். மண் சார்ந்த கவியோடு மண் சார்ந்த மனத்தோடு மண் சார்ந்த நடையில் அவரது பாடல்கள் அருமை.

தயாரிப்பு யாழ் தமிழ்த்திரை சார்பாய் கு.சுரேஷ்குமார் மற்றும் த.அலக்சாண்டர். நண்பனை இயக்குனராக்க ஆசை பட்டு தயாரிப்பாளராய் அவதாரம் எடுத்து இருக்கிறார்கள் .

இயக்குனர் கதிரவன் சங்கரங்கோயிலை சேர்ந்தவர், பிரபுதேவா அவர்களிடம் உதவி இயக்குனாராய் இருந்தவர். அவரே ஒளிப்பதிவு. முதல் திரைப்படம் என்று கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. தனது பணியை நிறைவாய் செய்து இருக்கிறார்.

இங்கு நிதர்சனம் திறமை, முயற்சி இருந்தும் வாய்ப்பு, களம் அமையவில்லை. ஏழு மாதங்களாய் வெளிவர முடியாமல் இப்போது வந்துள்ளது. மக்கள் வர இயலா நேரம் இப்படம் திரையிடப்படுகிறது. சரியான திரையரங்கங்கள் இல்லை. திரைப்பட வெளியீடு ஒருசிலரின் கட்டுப்பாட்டில். பார்த்த சிலரும் நல்ல விமர்சனங்களை முன்வைக்கின்றனர். என்ன பயன்? என்ன பதில்?