எனக்கே நான் புரியாத புதிர்

Tuesday, November 1, 2016

ஆணும் பெண்ணும் சமமா?

எந்த ஒரு வாசிப்பும் வாசிப்பவர் மன நிலையை பொருத்தது. இந்த தலைப்பை கண்ட சிலரோ, "இந்த கேள்வி கேட்கும் தோரணைய பாத்தா இவன் ஆணாதிக்க காரனோ"  என்று எண்ண கூடும்.
"அதெல்லாம் எங்களுக்கு தெரியும், நீ என்ன சொல்ல வர இப்ப" என்றும் எண்ணுபவர்கள் இருக்க கூடும்.

என்னைப் பொருத்த வரை பிறப்பில் இருவரும் சமம். இருப்பினும் பெண்கள் சற்றே அதிகம் மதிக்க தகுந்தவர்கள்.
காரணம் இயற்கை தரும் இடைஞ்சலும் , மறுபிறப்பு காணும் பிரசவமும்.

பொறுமை , அன்பு , அரவணைப்பு என நான் காரணம் கூறினால், அது ஆண்களிடம் இல்லை என்றாகிவிடும்.

"இதே ஆம்பளைங்க தான் பெக்கனும்னா பெக்க மாட்டோமா, இதை ஏதோ பெருசா பேசிகிட்டு"  என்று எண்ணும் அண்ணன்மார்களே, முதல் மதிப்பெண் நம்மாலும் எடுக்க முடியும். ஆனால் எடுத்தவர்களை தான் நாம் பாராட்டுவோம். அங்கணமே பெண் தன் கடமையாயினும் அதை செய்தலில் இருக்கும் சிரமங்களால் மதிக்கப்படுகிறாள்,

"அப்போ பொண்ணுங்க ஆம்பள மாறி ஜாலியா ஊர் சுத்தலாம் மற்ற எல்லாம் பண்ணலாம" என்று நினைப்பவர்கட்கு மட்டும்.
மற்ற எல்லாம் என்று சொல்வதில் நல்ல விசயங்கள் இருந்தால் செய்யலாம்.

"அப்படினா பெண்கள் எல்லாம் நல்லவங்களா, ஆம்பளைங்க எல்லாம் கெட்டவங்களா " என்று கேட்பவர்கட்கு.

பொதுப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இருபுறமும் நன்மையும் திமையும் நிறைந்தவர்கள் உண்டு. அதன் விகிதாசாரம் வேறுபடும்.

  உதாரணமாக துரோகம். ஒரு பெண்ணோ ஆணோ துரோகம் செய்தல் தவறுதான். ஆனால் மனைவிக்கு தெரியாமல் வேரொரு பெண்ணோடு சுற்றி திரியும் ஆணை காட்டிலும் , கணவனுக்கு தெரியாமல் வேரொரு பெண்ணோடு சுற்றி திரியும் பெண் தான் அவப்பெயருக்கு ஆளாகிறாள்.

   நல்ல பெண் பூ போன்றவள், நாற் /நூல் போன்ற நல்ல ஆண் கிடைக்க தொடுக்கப்பெற்று மலர் மாலையாகிறாள். குரங்கு போன்ற ஆண் கையில் சிக்கினால் சின்னாபின்னம் ஆகிறாள்.

  நல்ல சேர்க்கையோ தீய சேர்கையோ ஆண் எதையும் இழப்பதில்லை.

"இது ஆணாதிக்க சமுதாயம், அதான் இப்படி இருக்கு. அப்படி பெண்ண அடிமையா பாக்கிற சமுதாயம் எப்படியா உருப்புடும்" என என் இதயம் கூட சில சமயம் கேட்டதுண்டு.

பெண்கள் அடங்கி போக அவசியமும் இல்லை , கையேந்தி உரிமைக்காக நிற்கவும் தேவை இல்லை. அவள் ஒரு சுதந்திர பறவை. வேடன் விரித்த வலை அறியாது சிக்க வாய்ப்புள்ள பறவை. வேட்டையாடி பசியாற காத்திருக்கும் கழுகளுக்கு இறையாக வாய்ப்புள்ள பறவை.

ஆகவே சுதாரிப்பும் சுயகட்டுப்பாடும் கொண்டு பறக்கையிலே ஏமாற வாய்ப்பில்லை.

ஆணோ பெண்ணோ "எங்களுக்கு எல்லை தெரியும்" என்று சொல்லுபவர்கள் தாங்கள் செய்கின்ற செயலை பெற்றோரிடமோ துணையிடமோ சொல்ல முடியும் என்றால் தங்கள் எல்லை சிறப்பாய் கட்டமைக்க பட்டது என பொருள். இல்லை என்றால் செய்வது தவறு என உணர்ந்து நிறுத்திக்கொள்ளுங்கள்.

"காதலை எப்படி அப்பா அம்மா கிட்ட சொல்றது" என்று சொல்லும் வாலிப உள்ளங்களுக்கு காதலை கவனாமாய் செய்து கருத்தாய் பெற்றோர்களுக்கு புரிய செய்யுங்கள். ஜாதியின் பெயராலோ மதத்தின் பெயராலோ உண்மை காதல் இணைய தடை உண்டென்றால் தடை உடைத்து சேருங்கள். முக்கியமாக உண்மை காதலர்களுக்கு மட்டும்.

"அதென்னய்யா உண்மை காதல் பொய் காதல்" என கேட்கும் மக்களே அதன் பொருள் எமக்கும் தெரியாது. அதை உணர வேண்டியது தாங்கள்தான்.

"அது சரி எங்க காதல எப்படி என் துணைகிட்ட சொல்வது" என்று சொல்லும் நல்லவர்களே ஆள விடுங்க. அது தப்புனு சொன்னா உங்களுக்கு தப்புனே தெரியாது.

நான் ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் என சொல்லவில்லை.

ஆணும் பெண்ணும் சேர்ந்தே இவ்வுலகை படைத்திட்டனர். ஆம்  இவ்வுல ஜீவராசிகள் அனைத்தும் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் வாரிசுகளே.

இங்கு இருவரும் இணையானவரே. ஒருவரை ஒருவர் மதித்திடுவோம். இணைந்திருப்போம். இனிய உலகம் காண்போம், 

Friday, October 28, 2016

நானும் சொல்றேன்

நாட்டில்
நடக்கும்
நடப்புகள் காண
நடுக்கமும்
நம்முள்
நாட்டியமாடுது

மத வாதம்
இன வாதம்
தீவிர வாதம் என
வாதம் வந்த உலகிலே
வாழும் நாம்
கலியின்
கிலியில்

எத்துணை கொலைகள்
எத்துணை கள்ளம்
எத்துணை வன்கொடுமை
எத்துணை பெண்கொடுமை
அத்துணையும் ஒழியட்டும்
நரகாசுரன் அழிந்த நாள் முதலாய்

தீப ஒளியில்
தீமைகள் மறையட்டும்

அன்பும்
அமைதியும்
அரவணைப்பும்
அனைவரது இதயத்தில் பூக்கட்டும்

இனிப்புகள் உண்டு
இன்முகம் கொண்டு
இனிதே ஆடுவோம்
கொண்டாடுவோம்


தீபாவளி நல்வாழ்த்துகள்

Thursday, March 17, 2016

கதிரவனின் கோடை மழை - விமர்சனம் அல்ல நிதர்சனம்

இக்கோடையிலே ரசிகர்களுக்கு சிறந்த மண் சார்ந்த படைப்பாய் வெளிவந்து உணர்வு பூர்வமாய் இதயங்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம்.

இன்று வியாபார தந்திரம் அறியாது திறமை, படைப்பு, முயற்சி மட்டும் கொண்டு, வெளியிட்ட படைப்பாளிகளுக்கு வலியை மட்டும் தந்து நிற்கிறது.

தரமான படம் , அதை காண்பதற்கு அல்லது மக்களிடம் கொண்டு செல்வதற்கு  களம் அமையாது கண்டுகொள்ள ஆள் இல்லாமல் நிர்கதியாய் இருக்கிறது.

கதையின் பின்புலம். சங்கரங்கோயில் அருகே உள்ள கிராமம். அங்கு வாழும் மக்களில்  சிலர் கேரளா சென்று திருடி வசதியாய் வாழ்கின்றனர். அந்த கிராமத்தில் இருந்து ராணுவத்தில் பணியாற்றும் வீரனாக நம் கதாநாயகன்.

அறிமுக கதாநாயகன் கண்ணன், நடிகர் தனுஷ் அவர்களின் தம்பி உறவுமுறை.

அவரது   நண்பன் களவு செயல்களில் ஈடுபடுபவன். பலர் கூறியும்  அவன் மீது நம்பிக்கை கொள்கிறார் நமது நாயகன். அவ்வூரில் நடக்கும் அக்கிரமங்களை அடியோடு வேரறுக்க நினைப்பவர் காவல் துறை ஆய்வாளராய்
 வரும் இயக்குனர் களஞ்சியம் . அவரது பாசமிகு சகோதரி நம் கதையின் நாயகி. கண்டதும் ஈர்ப்பு அதன் எதிரொலியாய் காதல் கொள்கிறார் நம் நாயகன்.

இந்த சூழ்நிலையில் தனது நண்பன் திருட்டு செயலில் ஈடுபட்டு , திருட்டு நகைகளை ஊருக்கு எடுத்து வருகிறான். உண்மை அறியாமல் நாயகனும் நண்பனோடு கேரளா சென்று திரும்புகிறான் தனது இருசக்கர வாகனத்தில். அன்று இரவே திருடிய நகைகளை இருசக்கர வாகனத்தின் பெட்ரோல்  டேங்கில் நண்பன் கொண்டுவந்ததை அறிந்து மனம் நொந்து நட்பை பிரிகிறான்.இதானால் மனம் திருந்தும் நண்பனும் தொழில் செய்து பிழைக்கிறான். ஒரு சூழலில் இதை அறிந்து நட்பை தொடர்கிறான் நாயகன்.

கண்டதும் காதல், நாயகிக்கு ஆபத்தில் உதவி  , நாயகனின் மீது நாயகியின் அண்ணனுக்கு மரியாதை என சுலபமாய் சுபம் வரும் என்றிருக்க வருகிறது சிக்கல் விதியின் பேரால்.
திருந்தி வாழும் நண்பன் காதலித்த பெண்ணை மணம் முடிக்க. பலகாலம் அவனது திருட்டு தொழில் தெரிந்தும் சாட்சியம் இல்லாமல் அவனை பிடிக்க வாய்ப்பு தேடும் காவல் ஆய்வாளருக்கு, ஒரு திருட்டு சம்பவத்தில் நாயகனின் நண்பன் குற்றவாளியாய் ஐயப்பட செய்யும்  சூழ்நிலையும் ஆதாரமும் கிடைக்க, கைது படலம் நடக்கிறது.

விசாரணை என்ற பெயரில் அடிக்க, நண்பனும் இறக்கிறான். அதனால் நாயகியின் அண்ணனுக்கும் நாயகனுக்கும் பகைமை பிறக்கிறது.

நாயகன் நாயகியை கை பிடித்தார இல்லையா எனபது மீதி கதை.

இமான் அண்ணாச்சி நகைச்சுவைக்காக தன பங்கையாற்றி இருக்கிறார்.

இசை சாம்பசிவம், புதுமுகம் ஆனால் இதமான இனிய  இசை.

பாடல்கள் கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள். மண் சார்ந்த கவியோடு மண் சார்ந்த மனத்தோடு மண் சார்ந்த நடையில் அவரது பாடல்கள் அருமை.

தயாரிப்பு யாழ் தமிழ்த்திரை சார்பாய் கு.சுரேஷ்குமார் மற்றும் த.அலக்சாண்டர். நண்பனை இயக்குனராக்க ஆசை பட்டு தயாரிப்பாளராய் அவதாரம் எடுத்து இருக்கிறார்கள் .

இயக்குனர் கதிரவன் சங்கரங்கோயிலை சேர்ந்தவர், பிரபுதேவா அவர்களிடம் உதவி இயக்குனாராய் இருந்தவர். அவரே ஒளிப்பதிவு. முதல் திரைப்படம் என்று கூறுவதற்கு முகாந்திரம் இல்லை. தனது பணியை நிறைவாய் செய்து இருக்கிறார்.

இங்கு நிதர்சனம் திறமை, முயற்சி இருந்தும் வாய்ப்பு, களம் அமையவில்லை. ஏழு மாதங்களாய் வெளிவர முடியாமல் இப்போது வந்துள்ளது. மக்கள் வர இயலா நேரம் இப்படம் திரையிடப்படுகிறது. சரியான திரையரங்கங்கள் இல்லை. திரைப்பட வெளியீடு ஒருசிலரின் கட்டுப்பாட்டில். பார்த்த சிலரும் நல்ல விமர்சனங்களை முன்வைக்கின்றனர். என்ன பயன்? என்ன பதில்?